இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் டொலர் நிதி உதவியினை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.
நிதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய யு.எஸ்.எய்ட் (USAID) அமைப்பின் ஆசியப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி நிர்வாகி மைக்கல் ஷிபர் (Michael Schiffer) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இந்த நிதியினூடாக இலங்கையின் சந்தை சார்ந்த வளர்ச்சியை வலுப்படுத்தும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் மீள்தன்மையை வளர்ப்பது மற்றும் நல்ல நிர்வாக நடைமுறைகளை ஊக்குவிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவி
அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றில் எங்களுடைய பங்காளித்துவத்தின் விளைவாக, இலங்கையர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டு முயற்சிகளுக்கு இந்த நிதி ஆதரவளிக்கும் என யு.எஸ்.எய்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையின் விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், நீர், சுகாதாரம், உட்கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் வர்த்தக அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கா 1956 ஆம் ஆண்டு முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 598 பில்லியன்) இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் போது யு.எஸ்.எய்ட் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான திட்டத்தின் பணிப்பாளர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்டோரும் பங்கேற்றதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.