கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாத நிலையில் காணப்பட்டும் புதிதாக அமைக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை செயல்படுத்த வேண்டுமென புதிய அரசாங்கத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 295 மில்லியன் ரூபா செலவில் அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது.
ஓமந்தையில் அமைப்பதா? தாண்டிக்குளத்தில் அமைப்பதா? என்று அரசியல்வாதிகளின் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் மூன்றுமுறிப்பு பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையமானது இதுவரை திறக்கப்படாத நிலையில் கட்டிடம் சேதமடையும் நிலையில் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவசாயிகளின் கோரிக்கை
இந்நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தினை பகிரங்க கேள்வி கோரலூடாக வழங்கும் பட்சத்தில் விவசாயிகள் நியாயமான விலைக்கு தமது உற்பத்தி பொருட்களை வழங்க முடியும் என கூறியுள்ளனர்.
இதேவேளை, தற்போது வவுனியாவில் உள்ள மொத்த மரக்கறி கொள்முதலாளர்கள் சர்வாதிகார போக்கோடு செயல்படுவதாகவும் 10 வீதம் என்ற தரகுப்பணத்தை பெரும் நிலை காணப்படுவதோடு சில வேளைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என விவசாயிகளிடம் பணம் வழங்கப்படாத நிகழ்வுகளும் சம்பவிக்கிறது.
எனவே பகிரங்க கேள்விக்கோரலுக்கு உட்படுத்துகின்ற போது விவசாயிகளின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் விவசாய அமைச்சரும் புதிய அரசாங்கமும் ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.