நாட்டில் வங்கி மோசடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் தமது தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலியான செய்தி
அதன்படி, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான செய்திகளுக்கு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் தொடர்ந்தும் பரப்பப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சமீப காலமாக அதிகளவான நிதி மோசடிகள் பதிவாகிவரும் நிலையில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் வங்கிகளால் வழங்கப்படும் OTPயினை பிறரிடம் பகிர வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
வங்கி மோசடி நடவடிக்கைகள்
இதேவேளை உங்கள் தனிப்பட்ட தகவலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் கடவுச் சொற்கள், PIN இலக்கங்கள், OTP இலக்கங்கள் போன்ற இரகசிய தகவல்களை எந்த சூழ்நிலையிலும் மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என சம்பத் வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
மேலும் ”கணக்கு உள்நுழைவுக் கட்டுப்பாடு, உங்கள் கணக்குகளை இயக்க மூன்றாம் தரப்பினரை அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அதிகாரமளிக்கப்படாத கொடுக்கல்வாங்கல்கள் நிகழும் பட்சத்தில் நீங்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டியதுடன் சட்ட அமுலாக்கல் முகவராண்மைகளுடன் ஒத்துழைக்க வேண்டப்படுவீர்கள் என்பதை தயவு செய்து கருத்திற்கொள்ளவும்.”என கூறப்பட்டிருந்தது.
நாட்டில் வங்கி மோசடி நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல தரப்பினரிடம் இருந்து மக்களுக்கு இவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.