கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள்
புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அவ்விடத்தை தோன்றும் பணி, பலத்த
பாதுகாப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று(4) காலை 8.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை குற்ற விசாரணை புலனாய்வு பணியகப் பிரிவும், கொழும்பு குற்ற விசாரணை
புலனாய்வு பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அகழ்வு நடவடிக்கை
நேற்றையதினம்(3) திருகோணமலை குற்ற விசாரணை புலனாய்வு பணியகப் பிரிவு, கிண்ணியா
பொலிஸ் ஊடாக, நீதவான் நீதிமன்றத்தில், சமர்ப்பிக்கப்பட்ட AR 155/2025 வழக்கின்
பிரகாரம், நீதவான்
கே. ஜீவராணியினால் நிலத்தை அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்
கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியே இது எனவும் பெரிய வருகின்றது.
இக்காலப் பகுதியில், பொது மக்களின் குடியிருப்பு பிரதேசமாக காணப்பட்டது.
யுத்த
சூழ்நிலை உக்கிரமடைந்தபோது1990ஆம் ஆண்டு கடைசி பகுதியில் அங்கிருந்து மக்கள்
வெளியேறினார்கள்.
மீண்டும் 2011ஆம் ஆண்டு பொதுமக்கள் இங்கு மீள்குடியேறி, இன்று வரை அந்தப்
பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு
இந்த நிலையில், கொழும்பு குற்ற புலனாய்வு பணியகப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற
தகவல்களை அடுத்து, நேற்று(3) அவ்விடத்திற்கு கொழும்பு குற்றப்புலனாய்வு
பிரிவினர் வருகை தந்தனர். இதனை அடுத்து அந்த இடத்திற்கு பலத்த பாதுகாப்பும்
வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரே, இன்று (4) அவ்விடத்தை தோண்டும் நடவடிக்கை பகல் 1. 45 மணி வரை
சுமார் 5 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டும், ஆயுதங்கள் எதுவும்
மீட்கப்படவில்லை. இதன் காரணமாக, தோண்டப்பட்ட இடம், மீண்டும் மண் போட்டு
நிரப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி கிலய்மன் பெனான்டோ,
திருகோணமலை மாவட்ட குற்ற விசாரணை பணியாகப் பிரிவு பொறுப்பதிகாரி எம். எஸ்.
நஜீம், கொழும்பு குற்ற விசாரணை பணியகப்பிரிவு அதிகாரி (CID) சந்தன,
திருகோணமலை மாவட்ட தடையியல் ஆய்வு குழுவின் இன்றைய பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன்
திருகோமலை மாவட்ட விசேட அதிரடி பிரிவு குழுவின் தலைவர், உதவி பொலிஸ் பரிசோதகர்
பி.சாந்த கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எஸ். எம். கனி, அப்பகுதிக்கான கிராம
சேவை அதிகாரி உட்பட பலர் சமூகம் அளித்திருந்தனர்.