சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆசிய நாடுகளின் முதலாவது மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த மாநாடு பத்தரமுல்ல தியசரு பூங்காவில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாளை (17) ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆரம்ப விழாவினை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் உள்ள 70 க்கும் மேற்பட்ட ஈரநிலப் பூங்காக்களில் இருந்து கிட்டத்தட்ட 100 பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அந்தவகையில், இந்தியா (India) கொரியா, சீனா (China), பிலிப்பைன்ஸ், மியன்மார், மொங்கோலியா, ஜேர்மனி, நேபாளம் (Nepal), மற்றும் நியூஸிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தற்போது நாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மலேசியா (Malaysia), அவுஸ்திரேலியா (Australia) மற்றும் ஜப்பானை (Japan) பிரதிநிதித்துவப்படுத்தும் தலா 01 பிரதிநிதி என மூன்று பேரும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 05 ஈரநில பூங்கா பிரதிநிதிகள் பங்குபற்றவுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாட்டின் போது இந்த பிரதிநிதிகள் ஜூன் 20 ஆம் திகதி அதிபர் ரணில் விக்கிரமசிங்கவையும் (Ranil Wickremesinghe) சந்திக்க உள்ளதாகவும் மேலும் ரம்சா வலய நிலையத்திற்கும் தியசரு ஈரநில பூங்காவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதுடன் இலங்கையின் ஈரநில மையங்களின் மத்திய ஈரநில மையமாக தியசரு ஈரநில பூங்கா அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
அதன்படி, இந்த மாநாட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ (Arundika Fernando) , இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன (Yadamini Gunawardena) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது சம்பந்தமான நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாட்டில் முதலாவது ஈரநில மாநாட்டை நடாத்த முடிந்தமை தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
மேலும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இந்த மாநாட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.