உலகப் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அணு ஆயுத சேமிப்பின் அளவு பல நாடுகளில் சத்தமின்றி அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தியோகப்பூர்வமாக, கடந்த 40 ஆண்டுகளில் சீனா (China), பாகிஸ்தான் (Pakistan), இந்தியா (India), இஸ்ரேல் (Israel) மற்றும் வட கொரியா (North Korea) ஆகிய ஐந்து நாடுகளும் அணு ஆயுத குவிப்பில் ஈட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், 2024 இல் அமெரிக்காவின் FASஅமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் இன்னும் மூன்று நாடுகள் சத்தமின்றி அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களைக் குவித்து வருவதாக எச்சரித்துள்ளது.
புதிய கட்டுமானங்கள்
அத்தோடு, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அவர்களின் அணு ஆயுத தளங்களில் புதிய கட்டுமானங்களை எழுப்புவதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும், இரகசிய பகுதி ஒன்றில் அணுசக்தி சோதனைத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க போவதாக அமெரிக்க அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்துள்ளது.
FAS அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்பது நாடுகளிடம் மொத்தம் 12,121 அணு ஆயுதங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ள நிலையில், ரஷ்யா பல நூறு எண்ணிக்கைகளால் அமெரிக்காவை முந்தியுள்ளது.
அணு ஆயுதங்கள்
இந்த இரு நாடுகளும் மொத்தமுள்ள அணு ஆயுதங்களில் 88 சதவிகிதத்தை தங்கள் கைவசம் வைத்துள்ளது.
ரஷ்யாவிடம் 5,580 அணு குண்டுகளும் அமெரிக்காவிடம் 5,044 எண்ணிக்கையும் உள்ள நிலையில், எஞ்சிய 1,500 அணுகுண்டுகளை சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைவசம் வைத்துள்ளன.
இதனிடையே, தனது நிபந்தனைகளை ஏற்க மறுத்த உக்ரைன் ஜனாதிபதியை மிரட்டி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் மீண்டும் உலகப் போர் அச்சுறுத்தல் வெடித்துள்ளது.
சதவிகித வரி
இது மட்டுமின்றி, தங்கள் மீது விதிக்கப்பட்ட 20 சதவிகித வரிகளுக்கு எதிராக கொந்தளித்துள்ள சீனா, வர்த்தகப் போர் அல்லது எந்த வகையான போருக்கும் சீனா தயார் என அறிவித்துள்ளது.
அத்தோடு, ஒரு பெரிய போர் வெடித்தால் ரஷ்யாவை தோற்கடிக்கும் திறன் தங்களிடம் இருப்பதாக ஐரோப்பிய தலைவர்கள் பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க, ரஷ்ய, பிரித்தானியா மற்றும் பிரான்சின் 2100 அணு குண்டுகள் தயார் நிலையில் உள்ளன என்றும் சில நிமிடங்களில் அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்றும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.