மன்னாரில் (Mannar) மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது
அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய
தினம் (06.11.2025) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்
ஆரம்பமானது.
மன்னார் பொது விளையாட்டு
மைதானத்தில் இருந்து குறித்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக
சென்று மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள்
பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு
முன்னால் ஒன்று கூடி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி
மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து, எங்கள் மண்ணை சுடு
காடாக்காதே, அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே, உள்ளிட்ட பல்வேறு
வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு பேரணியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், மன்னார் மக்கள் எதிர்நோக்கும் குறித்த இரு பிரச்சினைகள்
குறித்து ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன் இடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து
மகஜரை கையளித்தனர்.
காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வு
மகஜரை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக
காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து
வருகின்றமை குறித்து நான் நன்கு அறிவேன்.

மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும்
வகையில் என்னிடம் கை அளிக்கப்பட்டுள்ள நிலையில்,நான் உடனடியாக ஜனாதிபதிக்கு
அனுப்பி வைப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.








https://www.youtube.com/embed/4sD5CoUAxek

