சிலாபம் – பங்கதெனிய பகுதியில் கூட்டுறவுச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் பெண் ஒருவரை தாக்கியதாக வெளியான செய்தி தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான பெண், தற்போது சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சிகிச்சை
இதேவேளை அவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் குறித்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, கூட்டுறவு அதிகாரிகள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண், பங்கதெனிய சந்தியில் உள்ள ஒரு தனியார் கட்டடத்திற்குப் பின்னால் ஒரு சமையலறையை கட்டி பல ஆண்டுகளாக சிறு வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.
அந்தக் கட்டடம் சமீபத்தில், சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தால் வாங்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மோதல்
இந்நிலையில் ஹலவத்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் அண்மையில் குறித்த கட்டடம் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், அந்த பெண் அவ்விடத்தை விட்டு வெளியேறாததால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதென கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து, சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் மற்றும் பிற ஊழியர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஹலவத்தை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் விஜேசிங்க, இது குறித்து தெரிவிக்கும் போது, குறித்த பெண் தனது கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான காணியை பலவந்தமாக ஆக்கிரமிக்கத் முயற்சிப்பதாகவும், தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: