தென்னிலங்கை மக்கள் தமது தேசத்தின் தலைவனாக தற்பொழுது தேர்ந்தெடுத்துள்ள அணுரகுமாரவுக்கு வயது 55.
அனுரவுக்கு அடுத்த நிலையில் அதிக வாக்குப்பெற்ற சஜித் பிரேமதாசவுக்கு வயது 57.
அரசியல் களத்தைப் பொறுத்தவரையில் இவர்கள் இருவருமே இளைஞர்கள்தான்.
ஒப்பீட்டளவில் தென்னிலங்கை மக்கள் தங்களைத் தலைமைதாங்கும் பொறுப்புக்களை இளைஞர்களிடம் ஒப்படைக்க முன்வந்திருப்பது அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப் பெரிய மாற்றத்தின் அடையாளமாக நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது.
இலங்கையில் பொருளாதார சீரழிவுகள், ஊழல்கள் போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டபோது, தென்னிலங்கை இளைஞர்களே முன்வந்து அதற்கான தீர்வை நோக்கி நாட்டை இட்டுச்சென்றிருந்தார்கள்.
இன்றைக்கு நாட்டையும், நாட்டின் எதிர்காலத்தையும் இளைஞர்கள் கைகளிலேயே தென்னிலங்கை ஒப்படைத்தும் இருக்கின்றது.
தமிழர்களும் அதனையே செய்யவேண்டும்.
தமிழர் தாயகத்தின் எதிர்காலத்தை, தமிழ் மக்களின் எதிர்காலத்தை இளைஞர்களிடம் ஒப்படைக்க முன்வரவேண்டும்.
தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவர்களாக இளைஞர்களையே முன்நிறுத்த வேண்டும்.
ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் மாவை சேனாதிராஜா எடுத்த நிலைப்பாடும், ஆடியிருந்த கூத்தும் ஒன்றே போதும் உதாரணத்துக்கு.
எம்மை வழிநடாத்திய எமது புதல்வர்கள் நாம் கனவில் கூட நினைப்பார்க்காத சாதனைகளையெல்லதாம் புரிந்ததை நேரில் கண்டுவிட்டும் கூட, எமது இளைஞர்களை நம்பாது வயது முதிர்ந்தவர்களிடமே திரும்பவும் எமது தலைமை ஒப்படைத்துவிட்டு, எமது அரசியல் எதிர்காலத்தை நோக்கிய பாதையில் ஒரு அங்குலம் கூட நகரமுடியாபடிக்கு கடந்த 15 வருடங்களாகத் தடுமாறிக்கொண்டிருக்கின்றோம்.
தலைவர் பிரபாகரன் தமிழ் இனத்தின் தேசியத் தலைவராக பரினாமம் பெற்றபோது அவருக்கு வயது வெறும் 35 மாத்திரம்தான்.
சூசையும், பொட்டம்மாணும், தமிழ்செல்வனும், பால்ராஜும், தீபனும் பிராந்தியத் தளபதிகளாக நியமிக்கப்பட்டு, பெரும் பெரும் வல்லரசு தேசங்களையேல்லாம் வியப்பில் ஆழத்தியபோது அவர்களுக்கு வயது வெறும் 21, 22தான்.
ஒரு இனத்தைத் தலைமைதாங்கி நடத்தக்கூடிய தகுதியும், பொறுப்புணர்வும், வல்லமையும், தமிழ் இளைஞர்களிடம் தாராளமாகவே இருக்கின்றது என்பதற்கு இவை வெறும் உதாரணங்கள் மாத்திரம்தான்.
தமிழ் இனம் தமது தம்மை தலைமைதாங்கி நடாத்துகின்ற பொறுப்பை, உணர்வை மறுபடியும் தமிழ் இளைஞர்களிடம் ஒப்படைக்க முன்வரவேண்டும்.
பெரியவர்கள், அனுபவஸ்தர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி, அவர்களுக்கு வழிகாண்பிக்கின்ற வகிபாகத்தை வகிக்கவேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு ‘அறகல’ நடக்கும்வரை காத்திராமல் உடனடியாக அதனைச் செய்தாகவேண்டும்.