யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட
சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொலை சம்பவத்துக்கு பின்னர்
குறித்த கும்பல் ஹயஸ் வானில்
யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண
மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு
பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த நிலையில் குறித்த கொலையை புரிந்தவர்கள், ஒத்துழைத்தவர்கள், திட்டம் தீட்டியவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
கைதானவர்கள் 20 வயது தொடக்கம் 25 வயதுக்குட்பட்டோர் எனவும் நயினாதீவு, கொக்குவில், தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஆறு பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீண்டகாலமாக இரண்டு வன்முறைக் கும்பலிடையே காணப்பட்ட பகைமை உணர்வே குறித்த
கொலைச் சம்பவத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


