தமிழ்நாடு- பாம்பன் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் பதுக்கி
வைக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று(19-12-2025) அதிகாலை குறித்த கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 9.5 லீட்டர் கஞ்சா எண்ணெய், இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், கடத்தல்காரர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் பாம்பன்
முந்தல் முனை குந்துகால், வேதாளை, மரைக்காயர்பட்டிணம், தனுஷ்கோடி உள்ளிட்ட
கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் படகுகளின் ஊடாக ஐஸ்
போதைப்பொருள், கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள்
கடத்தப்பட்டு வருகின்றன.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட கஞ்சா எண்ணெய்யையும், கடத்தலுக்காக பயன்படுத்தப்படவிருந்து படகினையும் இந்திய கடலோர
காவல்படை மண்டப முகாமுக்கு எடுத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விசாரணை
முதற்கட்ட விசாரணையில், சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அங்கிருந்த குறித்த படகில் இருந்து, கடலில் குதித்து தப்பித்த நால்வர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த நால்வரும் தங்கச்சி மடம், அந்தோனியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தப்பியோடிய நால்வரையும் தீவிரமாக தேடி வருவதுடன் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
எண்ணெய்யின் இந்திய மதிப்பு மதிப்பு சுமார் 12 கோடி இருக்கும் என இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெய் திருச்சி
சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

