அம்பாறையில் பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் 2 பிரபல வியாபாரிகள் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் மறைந்திருந்த ஒரு சந்தேக நபரும் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்பர் கிரா சனசமூக வீதி முன்பாக
உள்ள பகுதியில் மறைந்திருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைதாகினர்.
கல்முனை விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரசகிய தகவல் ஒன்றிற்கமைய தேடுதல் மேற்கொண்ட போது, இவ்விரு சந்தேக நபர்களும் பெருந்தொகையான கேரள கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு சந்தர்ப்பங்களில் இன்று(5) அதிகாலை கைது செய்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 54 மற்றும் 62 வயது
மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் நீண்ட காலமாக இந்த சந்தேகநபர்கள் கல்முனை
சாய்ந்தமருது மருதமுனை நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கஞ்சாவினை
விற்பனை செய்தும் விநியோகித்தும் வந்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைதான இருவரில் 7 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர் பெரிய நீலாவணை அக்பர் வீதியை சேர்ந்த பிரபல கைக்கடிகாரம் திருத்தும் நபர் என்பதுடன் 4 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்த மற்றைய சந்தேக நபர் கல்முனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகத்தை நடாத்தி வந்தவர் என்பதும் மேலதிக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர்கள் வசம் இருந்து பெருமளவான கேரள கஞ்சா பொதிகள் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 5 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பண நோட்டுக்கள் என்பன
மீட்கப்பட்டுள்ளதுடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க தாயாராகி வருகின்றனர்.