216.68 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், பேங்கோக்கில் குறித்த போதைப்பொருட்களை கொள்வனவு செய்து, வேறொரு நபர் மூலம் இந்த நாட்டிற்கு கொண்டு வந்து, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்றும், இந்த சந்தேக நபர் நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடத்தல் நடவடிக்கை
மேலும், குறித்த நபர் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு போதைப்பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு நபர்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், பின்னர் நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூபா 216.68 மில்லியனை நெருங்கி வருவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி, இந்த போதைப்பொருளை உள்ளடக்கிய பொதி வேறொரு நபரால் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது, பின்னர் அவர் அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்து சந்தேக நபரின் வீட்டிற்கு கொடுத்துள்ளார்.
திட்டமிட்ட செயல்
பின்னர் சந்தேக நபர் நேற்று (14) தாய்லாந்தின் பேங்கோக்கில் இருந்து ஒரு கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பியுள்ளார்.

குறித்த நடவடிக்கைகளை அவதானித்திருந்த அதிகாரிகள், சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரின் வீட்டில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 20 குஷ் போதைப்பொருள் பொட்டலங்களையும், அவற்றுக்குள் காணப்பட்ட 21 கிலோகிராம் 668 கிராம் போதைப்பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கூடுதலாக, கடத்தல்காரரிடம் இருந்து 4,900 அமெரிக்க டொலர்களையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

