புதிய இணைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவினால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசனின் பெயர் வர்த்தமானியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) தலைவர் இரா.சம்பந்தன் (R. Sampandan) காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் கடந்த (30.06.2024) இரவு 11 மணியளவில் கொழும்பில் (colombo) காலமானார்.
இந்நிலையில், அவரது வெற்றிடத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் சண்முகம் குகதாசனின் பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டு நீண்ட காலமாக கனடாவில் வசித்து வந்த சண்முகம் குகதாசன், 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத்தலைவராக இரண்டு சந்தர்ப்பங்களில் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் போட்டியிட்டிருந்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் 16,770 வாக்குகளைப் பெற்றார்.
அந்த தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் காலஞ்சென்ற இராஜதவரோதயம் சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் அவர், நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கவுள்ளார்.