லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகளின் அளவுகோல்களை செயற்படுத்துமாறு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக குறித்த யோசனையை சமர்ப்பித்தார்.
நலன்புரி நன்மைகள் சபை தற்போது அஸ்வெசும நலன்புரி நன்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
தோட்டத் தொழிலாளர்கள்
2002 ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட 2022 ஆண்டின் 1 இலக்க நலன்புரி நன்மை கொடுப்பனவு ஒழங்குவிதிகளுக்கு அமைய திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
அந்த ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்யும் நபர்கள் அல்லது குடும்பங்கள் அஸ்வெசும நன்மைகளை பெறுவதற்கான உரித்தைப் பெறுவார்கள்.
பெருந்தோட்டத் துறையில் உள்ள தோட்டங்களில் தனி வீடுகள் இல்லாதிருப்பதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் தனிக் குடும்பங்கள் கூட்டாக ஒரே லயன் வீடுகளில் வசிக்கின்றனர்.
ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனை
தற்போதைய நடைமுறைக்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் வேறுவேறான குடும்ப எண்ணிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல், லயன் அறைகளில் வாழ்கின்ற அனைத்து நபர்களும் ஒரே குடும்ப அலகாக கருதப்படுகின்ற குறித்த நிலை மேற்குறித்த குடும்பங்களுக்கு பாதகமானது என்பது தெரியவருகிறது.
எனவே, 2022 ஆண்டின் 1 இலக்க நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை கட்டளைகளின் பிரகாரம், அஸ்வெசும முன்மொழிவுத் திட்டத்திற்கு தகைமைகளை நிர்ணயிக்கும் போது லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு செயலாற்றுமாறு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.