இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட 10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது 50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 10 கிலோ 130 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கையிருப்பு
குறித்த போதைப்பொருள் கையிருப்பு இராமேஸ்வரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயார்படுத்தப்பட்டிருந்ததாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் கடத்தலின் பிரதான சந்தேகநபரும், குறித்த போதைப்பொருள் கையிருப்பை விநியோகித்த நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.