மன்னார் (Mannar) மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றில் இன்று (21) காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள்
இதன்போது விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.
பிரதான சந்தேகநபர் தற்போது வீட்டில் இல்லை எனவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களே இந்த சம்பவத்திற்கு சாட்சிகள் என நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிபதி உத்தரவு
இந்த நிலையில், சாட்சிகளை விளக்கமறியலில் வைத்தால், காவல்துறையினரால் வழக்குகளை நிரூபிக்க முடியாது எனவும், காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வழக்குகள் தோல்வியடைவதற்கு இதுவே காரணம் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை ஏனைய நான்கு சந்தேகநபர்களையும் நவம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/fxIGDHE1tQY