நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். போதனா வைத்தியசாலைக்குள் வரும் முன்னரே வாயிற் காவலாளியுடன் சண்டைப் பிடித்து ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டுத் தான் உள்ளே வந்தார். எனவே ஒரு பணிப்பாளராக இதுபோன்ற பதற்றமான சூழ்நிலைகளை தடுக்க வேண்டிய தார்மீக கடமை எனக்கு உண்டு. அது என்னுடைய கடமை என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
மேலும், தவறுகளை சுட்டிக்காட்டுவது வழமைதான் எனினும் தற்போது சமூகஊடகங்களில் சிலர் அதனை பெருப்பித்து வைத்தியசாலையின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தன்னை சேர் என்று அழைக்குமாறு குறிப்பிட்டமையானது, அடிமைத்தனமாக இருந்ததாகவும், அவர் அங்கு வருவது பதற்ற நிலையை உருவாக்குவதாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஒரு சில வைத்தியர்கள் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்தமாக எல்லோரையும் குற்றஞ்சாட்ட முடியாது எனவும் அவர் இதன்போது தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் இலங்கையின் இலவச வைத்தியத்துறையில் நடப்பது என்ன தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் பிரித்தானியாவில் பணியாற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சதானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி…