மோசடியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (11) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் – இளவாலையைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எல்லை கண்காணிப்பு
இந்த நிலையில், இந்தியாவின் புது டில்லிக்கு புறப்படும் எயார் இந்தியா விமானம் AI-282 இல் ஏறுவதற்காக அவர் இன்று முற்பகல் 08.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்படி, அவர் முதலில் புது டில்லிக்கு சென்று பின்னர் ஜேர்மனிக்கு மற்றொரு விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறனதொரு பின்னணியில், இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் கொண்ட விமானப் போக்குவரத்து அதிகாரிகள், அந்த ஆவணங்களுடன் பயணியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, குறித்த சந்தேகநபர் மோசடியாக ஜேர்மனி விசா பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், அவர் தன்னை ஒரு ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர் என காட்டிக்கொண்டுள்ளதோடு, தனது கடவுச்சீட்டில் காங்கேசன்துறை துறைமுகம் வழியாக சமீபத்தில் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறும் போலி குடியேற்ற முத்திரையையும் வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இளைஞனைக் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.