நாடாளுமன்றத்தில் சுமார் 20 மருத்துவர்கள் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதும், அவர்கள், சுகாதார சேவைகளைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, தேசிய மக்கள் சக்தியின் மருத்துவர்கள் பேசவில்லை என்று, அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பேச்சாளர் சமில் விஜேசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அவர்களில் 3 அல்லது 4 பேரைத் தவிர, மீதமுள்ளவர்கள் கடந்த ஒக்டோபர் வரை சேவையில் இருந்தவர்களாவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார சேவைகள்
மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஆழம் அவர்களுக்குத் தெரியும். ஆனால் மருத்துவர்களுக்கு ஏற்படும் அநீதி மற்றும் சுகாதார சேவைகளில் ஏற்படும் பாதிப்பு குறித்து அதிகாரிகளுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ தெரிவிக்க அவர்கள் எந்த முயற்சியையும் செய்யவில்லை என்றும் சமில் விஜேசிங்க கூறினார்.
கடந்த அரசாங்கத்தில் 13 மருத்துவர்கள் இருந்ததாகக் கூறிய சமில் விஜேசிங்க, மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பிரச்சினையைத் தீர்க்க, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கத்திற்குள் மருத்துவர்களிடமிருந்து அத்தகைய ஆதரவை நாங்கள் காணவில்லை என்றும் அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.