அநுராதபுரத்தில் பெண் வைத்தியருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து மன்னார் பெண்கள் வலை அமைப்பு பிரதமருக்கு எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Anuradhapura Teaching Hospital) பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி மன்னார் பெண்கள் வலை அமைப்பினால் இன்று(15) பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு (Harini Amarasuriya) கடிதம்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
துயர் சம்பவம்
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, “மதிப்பிற்குரிய இலங்கை வாழ் குடிமக்களுக்கும், ஊடகத்துறையில் கூடியிருக்கும்
பெண்கள், ஆண்களுக்கும் மற்றும் பிரதமர் அவர்களுக்கும்,
இன்று நாங்கள் அனைவரும் துயரமான இதயங்களுடன் உங்கள் முன், இலங்கை முழுவதையும்
உலுக்கிய சம்பவம் தொடர்பாக எடுத்துரைப்பதற்கு ஒன்று கூடியுள்ளோம்.

அநுராதபுரத்தில் பணியாற்றும் பெண் வைத்தியருக்கு, இராணுவத்திலிருந்து
தப்பியோடிய இராணுவச்சிப்பாயால் கத்தி முனையில் இழைக்கப்பட்ட உடல் ரீதியான
வன்புணர்வு என்பது, ஒரு தனிமனிதன் மீதான வன்முறையல்ல, மாறாக இது இலங்கையில்
வாழுகின்ற ஓட்டு மொத்தப்பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு, நம்பிக்கை மீது
இழைக்கப்பட்ட குற்றச்செயலாகும்.
இந்தக்கொடூரமான வன்செயல் பெண்கள் நலிந்த நிலையில் உள்ளார்கள் என்பதை
எழுத்துரைக்கின்றது.
அத்துடன் இது சாதாரண பெண்களுக்கு மட்டுமல்ல, தங்களது வாழ்க்கையை ஏனையவர்களின்
உயிர்களைக்காப்பாற்ற தங்களை அர்ப்பணித்த வைத்தியமாது மீதும் நடந்தேறியுள்ளது
என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
பாரதூரமான குற்றச்செயல்
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே பெண்களாகிய நாங்கள் வலிமையான மற்றும் உடனடியான
மேன்முறையீட்டை தங்களுக்கு முன்வைக்கின்றோம்.
இந்தப் பாரதூரமான குற்றச்செயலைப் புரிந்த கொடும்பாவி சட்டத்தின் கீழ் மிகவும்
கொடூரமான முறையிலும், தண்டிக்கப்படவேண்டும்.

இந்த சம்பவத்திற்கான நீதி உடனடியாகவும் கடுமையாகவும் எவ்வித
காலதாமதமின்றியும், எதுவித இணக்கப்பாடுகளுமின்றியும் வழங்கப்படவேண்டும். இது
ஒரு சம்பவம் தொடர்பானதல்ல.
மாறாக இதன் முலம் ஒரு தெளிவான கருத்து முன்வைக்கப்படவேண்டும். அதாவது
இலங்கையில் இவ்விதமான பாரதூரமான செயல்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்
எவ்விதத்திலும் பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது
என்பதாகும்.
பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் நீதி முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.
சட்டநடைமுறைகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
சர்வதேச மகளிர் தினம்
இதில் ஆறாத்துயரமாக அமைவது மார்ச் மாதம் உலகளாவிய ரீதியில் அனைத்துப்
பெண்களையும் மேன்மைப்படுத்தவும் பாராட்டவும் அவர்களது சேவைகளுக்காக நன்றியைச்
செலுத்தவும் என்பதுடன், மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக
அனுஸ்டிக்கப்பட்டும் வருகின்றது.
சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டு இருதினங்கள் கடந்த நிலையில் இந்த நெஞ்சை
உலுக்கும் சம்பவம் நடைபெற்றது மிகுந்த வேதனையளிக்கின்றது. மேலும், இந்த சம்பவம் மார்ச் மாதத்தின் கொண்டாட்டங்களில் ஒரு காரிருளைப் படரச்செய்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பெண்களின் மனதில் கடும் கோபத்தையும் துயரத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் சொல்லப்போனால் பெண்கள் மார்ச் மாதத்தில்
மட்டுமல்ல மாறாக அவர்களது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் மதிக்கப்படவும்
கொண்டாடப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டியவர்கள்.
இந்த துயரகரமான சம்பவம். பெண்களாகிய நாங்கள், சமஉரிமைக்காகவும் நீதிக்காகவும்
இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியள்ளதென்பதை உணர்த்துகின்றது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம், இந்தச்
குற்றச்செயலில் ஈடுபட்டநபர் இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
சமகாலங்களில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களை உற்று நோக்குகின்றபோது
காணக்கூடியது யாதெனில் இவ்வாறாக இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்கள்
சமுகங்களில் இழைக்கப்படுகின்ற குற்றச்செயல்களில் பெரும்பங்கினை வகிக்கின்றனர்.

இந்த இழிவான
செயல்கள் ஆயுதம் தாங்கி பாதுகாப்பில் ஈடுபடுகின்றவர்களின் பொறுப்புடைமையையும்
ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
இந்நிலையில், அந்த பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் தனிநபர்கள் இவ்வாறான கொடூரமான
குற்றச்செயல்களில் ஈடுபடும்போது இலங்கையில் வாழ்கின்ற மக்கள் எவ்வாறு
பாதுகாப்புத்துறையின் மீது நம்பிக்கை கொள்ளமுடியும்?
இலங்கை அரசாங்கம் இந்த தப்பியோடிய இராணுத்தினர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குற்றச்செயல்கள் நடைபெறுவதை
முற்றாகத் தவிர்க்கவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம் என குறித்த
அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
you may like this
https://www.youtube.com/embed/CWbF9csMQpg

