ஓக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி (OED) தனது ஜூன் 2025 புதுப்பிப்பில், இலங்கையில் பயன்படுத்தப்படும் பல தனித்துவமான சொற்களை இணைத்துக் கொண்டுள்ளது.
இலங்கை மொழி, கலாச்சார தனித்துவங்களை உலக அரங்கில் வலியுறுத்தும் முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகின்றது.
இவற்றில் முக்கியமான ஒன்று “Asweddumize” – நெல் அறுவடைக்காக நிலத்தை தயார் செய்வதைக் குறிக்கும் சிங்கள சொல்லான அஸ்வெத்தும என்னும் சொல் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

1857 ஆம் ஆண்டே ஆவணப்படுத்தப்பட்டதும், இலங்கையின் நிலம் சீரமைப்பு மற்றும் விவசாய வரலாற்றின் முக்கியமான பகுதியாகவும் இந்த சொல் கருதப்படுகின்றது.
இருபதாண்டுகளுக்கும் மேலான கல்வியியலாளர்களின் முயற்சிகளுக்குப் பின்னர், இந்த சொல் தற்போது உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது.
“Kottu Roti” –வெட்டப்பட்ட ரொட்டி, இறைச்சி, காய்கறிகள், மசாலா கலந்து செய்யப்படும் சாலையோர உணவான கொத்து ரொட்டி என்ற சொல்லும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
“Mallung” தேங்காயும் மசாலாவும் கலந்து சுருட்டிச் செய்யப்பட்ட கீரை உணவு அல்லது கீரை சுண்டலை சிங்களத்தில் குறிக்கும் மெல்லுங், மற்றும் “Kiribath” கிரிபத் எனப்படும் பாற்சோறு ஆகியவை இலங்கையின் சமையல் மரபை பிரதிபலிக்கும் வகையில் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
அவ்ருது “Avurudu” என்ற சிங்கள சொல், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டாகவும், உணவு, பழக்கவழக்கங்கள், விளையாட்டுகள் மூலம் கொண்டாடப்படும் இலங்கையின் கலாச்சார விழாவினை குறிக்கின்றது. இந்த சொல் இப்போது அகராதியில் இடம் பெற்றுள்ளது.
மேலும், “Watalappam” – இஸ்லாமியர்களின் முக்கிய உணவாக கருதப்படும் வட்டலப்பம், சிங்கள துள்ளிசையான பைலா “Baila” – போர்ச்சுக்கீஸ் தாக்கம் கொண்ட ஒய்வின்றி நடனப் பாணி இசையை இது குறிக்கின்றது.
பபரே “Papare” – கிரிக்கெட் விளையாட்டுகளில் பரவலாக இசைக்கப்படும் பேன்ட் இசையும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வலவ்வ “Walawwa” – இலங்கையில் நில அளவையுடன் கூடிய பிரமாண்டமான மரபணை வீடு என்பதைக் குறிக்கிறது.
ஒசரி “Osari” – சிங்கள பெண்கள் அணியும், தனித்துவமான மடிப்பு வடிவத்தை கொண்ட பாரம்பரிய புடவையை குறிக்கின்றது.
மேற்குறிப்பிட்ட சொற்கள் ஓக்ஸ்போர்ட் அகராதியின் புதுப்பிக்கப்பட்ட சொற் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

