இலங்கையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்குவதாக வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் (SLBFE), இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் வழியாக நடைபெறும் பொய்யான வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக இவ்வாறு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
துபாயில் பணிபுரிந்த ஓர் இலங்கை நபர், தற்போது துபாயில் வேலை வாய்ப்புக்களை வழங்குவதாகக்கூறி போலி விளம்பரம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மக்களை ஏமாற்றும் நோக்கில், துபாயில் வேலை செய்யும் இலங்கை மக்களிடமிருந்து வீடியோக் கருத்துகள் சேகரிக்கப்படுகின்றன,பின்னர் அவை தவறாக மாற்றப்பட்டு அந்த நபர்தான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியது போன்று விளம்பரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வீடியோக்கள் யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படுகின்றன, மேலும் பலரை மோசடிக்குள் இழுக்க முயற்சிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவு தற்போது இந்த மோசடியை தீவிரமாக விசாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பலர் பணத்தை இழந்துள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் வரும் சந்தேகத்திற்கிடமான வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்ப வேண்டாம் எனவும், அத்தகைய மோசடிகள் குறித்து தகவல் தெரிந்தால், கீழ்காணும் எண்களில் தகவல் வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1989 (இலவச ஹொட்லைன்)
011-2864123 (சிறப்பு விசாரணைப் பிரிவு)