யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (01.09.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் சம்பவத்தினத்தன்று(01) இரவு 9:30 மணியளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டித் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில், 22 வயதுடைய விபுலானந்தம் அபீஸ் என்ற இளைஞன் கையில் வாள்வெட்டு
தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட
இளைஞன் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை
எந்த ஒரு காரணமும் தெரியவரவில்லை என்பதுடன் கடந்த வருடம் குறித்த இளைஞன் மீதும் அவரது தாயார் மீதும்,
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தாக்குதல்
குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் சுண்ணாகம் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.