Courtesy: Sivaa Mayuri
இந்திய அதானி (Indian Adani) குழுமத்தின் தலைமையிலான இலங்கையின் துறைமுக விரிவாக்கத் திட்டம், திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவரை கோடிட்டு ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்கின்றன.
இத்திட்டத்தின் முதல் கட்டம் 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவு செய்யப்படும் என்று இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் சிறிமேவன் ரணசிங்க ப்ளூம்பேர்க்கிடம் தெரிவித்துள்ளார்.
1 பில்லியன் டொலர்கள்
அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி இந்தத் திட்டம் தொடரும் என்று அவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் அதானி குழுமம் முக்கிய பங்கு வகிக்கின்ற நிலையில் 1 பில்லியன் டொலர்களை உள்ளடக்கிய கொழும்பு முனையத் திட்டம், இலங்கையின் துறைமுகத் துறையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாகும்.
எனினும், இந்த திட்டத்துக்கான அமெரிக்க நிதியுதவி இறுதி செய்யப்படவில்லை என்று கூறிய ரணசிங்க, தேவையான நிதியுதவியை பெற்றுக்கொள்வது என்பது திட்டத்தை அபிவிருத்தி செய்யும் கூட்டு நிறுவனமே பொறுப்பாகும் என்றும் கூறியுள்ளார்.
இலஞ்சக் குற்றச்சாட்டுக்கள்
முன்னதாக, கொழும்புத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் கடந்த ஆண்டு 553 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க உடன்பட்டது.
இருப்பினும், அதானியின் மீது, அமெரிக்காவில் சுமத்தப்பட்டுள்ள இலஞ்சக் குற்றச்சாட்டுக்களை அடுத்து, கடனுதவி தொடர்பாக ஆராயப்போவதாக குறித்த அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவின் பெரிய உள்கட்டமைப்பு முதலீடுகளை சமநிலைப்படுத்தவும், பிராந்தியத்தில் நாட்டின் செல்வாக்கை எதிர்க்கவும். இந்த அமெரிக்க நிதியுதவியை, அதானியின் துறைமுக திட்டத்துக்கு வழங்க உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.