திருச்சி (Trichy) – இலங்கை (Sri Lanka) இடையே கூடுதல் விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபாய், சாா்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் இலங்கை தவிர ஏனைய நாடுகளுக்கு தினசரி 1 முதல் 4 சேவைகள் உள்ளன.
ஆனால் இலங்கைக்கு விமானங்களை இயக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தினசரி 1 என்ற வகையில் வாரந்தோறும் 7 சேவைகளை மட்டுமே இயக்கி வந்துள்ளது.
வாரத்தில் 4 நாட்கள்
அதன்படி வாரத்தில் செவ்வாய், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 10.10 இற்கு மீண்டும் இலங்கை செல்லும்.
இதேபோல திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.05 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 4.10-க்கு புறப்பட்டு செல்கிறது.
இந்நிலையில் வியாழக்கிழமைகளில் காலையும் இலங்கைக்கு கூடுதல் விமானச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக திருச்சியில் நேற்றுமுன்தினம் (31) நடந்த விழாவில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன திருச்சி நிலைய மேலாளா் அஜாஸ் உள்ளிட்டோர் கூடுதல் சேவையைத் ஆரம்பித்து வைத்துள்ளனர்.