வீதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டு உபகரணங்கள் நிறுவப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(05) உரையாற்றிய அமைச்சர், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 40 பேருந்துகளில் AI கட்டுப்பாட்டு உபகரணங்கள் நிறுவப்படும் என்று கூறினார்.
“சாரதிகளை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு உபகரணங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் 40 பேருந்துகளில் நிறுவப்படும். இதன் பிறகு, அதை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வோம்,” என்று அவர் கூறினார்.
வீதி பாதுகாப்பில் கவனம்
சிசிடிவி கமராக்களை மனிதர்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும் என்பதால், AI கட்டுப்பாட்டு உபகரணங்களை அமைச்சசு தேர்வு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் போக்குவரத்து அமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவை என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் ரத்நாயக்க, வீதி பாதுகாப்பில் கவனம் செலுத்தும் ஒரு விரிவான திட்டத்தில் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
இது தொடர்பாக 85 அம்ச முன்மொழிவு வகுக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 01 ஆம் திகதியில் இருந்து அது செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

