நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு (Ministry of Education) இன்று (13.10.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், நாளை (14) களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மோசமான வானிலை
குறித்த பிரதேசங்களில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளம், கடும் காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
பலத்த மழை காரணமாக கொழும்பு, களுத்துறை கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, காலி, குருநாகல், கண்டி, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.