தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு போராட்டம் ஒன்றின் போது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தார் என குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைகளில் இன்றையதினம் (28.10.2024) விமல் வீரவன்ச முன்னிலையாகவில்லை.
வைரஸ் காய்ச்சல்
நோய் நிலைமையினால் தம்மால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
குறிப்பாக வைரஸ் காய்ச்சல் காரணமாக தம்மால் விசாரணைகளில் பங்கேற்க முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
இந்த விடயங்களை கருத்தில் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
பொது மக்களுக்கு இடையூறு
இந்த வழக்கின் பிரதிவாதி மற்றும் சாட்சிகளை குறித்த தினத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அப்போதைய ஆணையாளர் சயித் அல் உசைன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தை எதிர்த்து இந்த போராட்டத்தை விமல் வீரவன்ச, தரப்பினர் நடத்தி இருந்தனர்.
இதன்போது, போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி பொலிஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.