இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் (M. A. Sumanthiran) தான் கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை சிறீதரன் (S.Shritharan) உணர்ந்து கொள்ளவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றையதினம் (19.05.2025) யாழ் ஊடக அமையத்தில் விளக்கமளித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர்.
கட்சியின் மத்திய செயற்குழு
கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அதிகாரம் இருக்கின்றது.
அதன்படி கட்சியில் வறிதாகும் பதவி நிலைகளுக்கு மத்திய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும்.

அதன்படியே இன்றைய பதவி நிலை நியமனங்கள் செய்யப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை சிறீதரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைப்பு தொடர்பில் பல கட்சிகளுடன் பேசியிருக்கின்றோம்.
அதற்கு தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ஓரணியில் நின்று தேசியக் கட்சிக்கு இடங்கொடுக்காத வகையில் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தரப்பினர் கையகப்படுத்தும் வகையில் அமைவதற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகின்றேன்.
ஏனைய கட்சிகளின் ஆதரவு
நான் ஆட்சி செய்வது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளேன். அதன்படி இன்று எமது தேசியப் பரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

இதேவேளை ஏனையோர் கூறுவது போன்று எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கப்பாட்டையும் குழப்பியது கிடையாது” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/I-59FsvtbyI

