யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக
கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை
நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ்
மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில்
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட வேளையில், அப்போதைய பாரதப்
பிரதமர் மன்மோகன் சிங், தலைமையிலான அரசாங்கத்திடம் என்னால் முன்வைக்கப்பட்ட
கோரிக்கைக்கு அமையவே குறித்த கலாசார மையத்தினை இந்தியா எமக்கு
அளித்திருக்கின்றது.
பெயர் மாற்றம்
யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் அதனை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்டப்
பணிகள் அனைத்தும் எம்மாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்ததன. இவ்வாறான
பின்னணியிலேயே குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலகப் பொதுமறையான திருக்குறளை எமக்களித்த திருவள்ளுவர் மதிப்பிற்குரியவர். அவரையும் அவருடைய ஆளுமையையும் போற்றிப் புகழ்வதில்
தமிழர்கள் யாருமே பின்நிற்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இந்திய அரசினால்
வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை எமது மக்கள் ஆர்வத்துடனும் பெருமிதத்துடன்
பிதிஷ்டை செய்து பராமரித்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் அடையாளம்
எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ்
மக்களின் அடையாளங்களுள் ஒன்றான ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர்
நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய
சக்திகளின் மறைகரம் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்குமோ என்ற
நியாயமான சந்தேகத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதனை அவதானிக்க
கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான சந்தேகங்கள், இந்த நாட்டிலே புரையோடிப் போய் இருக்கின்ற தேசிய
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியமான தேசிய நல்லிணக்க முயற்சிகளிலும்
பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த
இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கையின் தற்போதைய புத்தசாசன சமய கலாசார அலுவல்கள்
அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் போன்றோர் பெயர்
மாற்றப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று
கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.