மித்தெனிய பகுதியில் நேற்றுமுன்தினம்(18) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவனும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
09 வயதான குறித்த சிறுவன், காலி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனும் பலி
மித்தேனிய கடேவத்த சந்திப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாதோர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த சிறுவன் படுகாயமடைந்திருந்தார்.
துப்பாக்கிச் சூட்டையடுத்து இலக்கு வைக்கப்பட்ட நபர்(சிறுவனின் தந்தை) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது மகனும் மகளும் படுகாயமடைந்தனர்.
பின்னர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மகளும் உயிரிழந்த நிலையில், தற்போது மகனும் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்தவர் “கஜ்ஜா” என்ற அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளடதுடன் அவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.