கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கித்தாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட துப்பாக்கித்தாரியிடம் நடத்திய விசாரணையில், குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடத்த வந்த மற்றைய நபர் குறித்த எந்தத் தகவலும் தனக்கு தெரியாது எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாத்திரமே இருவருக்கும் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர், சந்தேகநபர்கள் மறைந்திருக்க பலர் உதவி வழங்கியுள்ளமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணை
இதன்படி, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மற்றும் கைது செய்யப்பட்ட மற்றைய இரு சந்தேகநபர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் மேலும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன தலைமையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
11 பேர் கைது
இதன்போது சந்தேகநபர்களிடம் T-56 துப்பாக்கி, T-56 ரவைகள் உட்பட 283 வகையான தோட்டாக்கள், 2 T-56 தோட்டாக்கள், 2 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், கைவிலங்குகள் மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
கடந்த ஜூலை மாதம் 08 ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கிளப் வசந்த மற்றும் மற்றுமொரு நபர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், கிளப் வசந்தவின் மனைவி, பாடகி கே.சுஜீவா உட்பட மற்றுமொரு பெண் காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.