இந்திய தலைநகர் புது டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலுக்கு அருகே காரில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலின் சந்தேகநபரான தற்கொலை குண்டுதாரி வைத்தியர் உமர் முகமது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது அவரின் புகைப்படம் ஒன்றையும் இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
பயங்கரவாத தாக்குதல்
சந்தேகநபரான வைத்தியர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அல் ஃபலா வைத்தியக் கல்லூரியில் வைத்தியராக பணியாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய கார் தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என்பதை அடையாளம் கண்ட பிறகு, டெல்லி தாக்குதலுக்கும் இந்த பயங்கரவாத வலையமைப்பிற்கும் இடையே உள்ள தொடர்பை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலை நடத்துவதற்கு சந்தேகநபர் அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெயை (ANFO) பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, தற்கொலைத் தாக்குதலின் சந்தேக நபரான ஓட்டுநர் செங்கோட்டைக்கு அருகிலுள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் காரில் வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஜெய்ப்பூர், ஹரியானா, பஞ்சாப், ஹைதராபாத், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

