தமக்கு எதிராக போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால குற்றம் சுமத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மற்றும் வாட்ஸ்அப்பில் பரவும் போலியான செய்திகளை எதிர்த்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு, அமைச்சரின் ஊடக செயலாளர் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
போலியான தகவல்கள்
அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் நிஷ்ஷங்க சேனாதிபதி ஆகியோரின் பெயர்களை சேர்த்து சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் அலுவலகத்தில் நிஷ்ஷங்க சேனாதிபதியைச் சந்தித்ததாக வெளிப்படுத்தும் வகையில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், இந்தக் காணொளிகள் மற்றும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. எந்தவொரு சந்திப்பும் நடைபெறவில்லை என்றும், இவ்வாறான தவறான செய்திகளை பரப்புவது அமைச்சரின் பெயர் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நம்பிக்கை
இது பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவறான செய்திகளை பரப்புவதன் மூலம் மக்கள் உண்மை தகவல்களை அறிவதற்கான உரிமை மீறப்படுகிறது என்றும், சமூகத்தில் தவறான புரிதல்கள் உருவாக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போது பரவும் போலியான செய்திகளின் நகல்கள் சிலவும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த தவறான செய்திகளை எதிர்த்து முழுமையான விசாரணை நடந்து, சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.