தற்போது நாட்டில் தேங்காய் விலை உச்சம் தொட்டுள்ளது.இவ்வாறு உச்சம் தொட்ட தேங்காய் விலையை குறைக்கும் வகையில் அரசாங்கம் தென்னை செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
இதன்படி நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் ரூ.9,500 மதிப்புள்ள 4,000, 50 கிலோகிராம் கலப்பு உர மூடைகளை ரூ.100 சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
தென்னை மர உரிமையாளர்களுக்கு உர மானியம்
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சக ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை மர உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிலிருந்து (russia)இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் MOP உரத்தில் 27,500 மெட்ரிக் தொன்களைப் பயன்படுத்தி 56,000 மெட்ரிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரித்ததன் மூலம் இது அடையப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.