இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவை தளமாகக் கொண்ட புலனாய்வு அமைப்புகளும் கொழும்பில் உள்ள தங்கள் முகவர்கள் மற்றும் உள்ளூர் கையாட்களின் ஆதரவுடன் தேர்தலை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன.
இந்தியா, சீனா நாடுகளுக்கு முக்கியம்
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் இலங்கைக்கு மட்டுமன்றி, நாட்டில் பல திட்டங்களைக் கொண்டுள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
இந்தியாவும் சீனாவும் புதிய அரசாங்கம் இலங்கையில் தங்கள் திட்டங்களைத் தொடர்வதையும் அவர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதையும் உறுதிப்படுத்த ஆர்வமாக உள்ளன.
சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரிகள் தேர்தலில் போட்டியிடும் 3 முக்கிய வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எந்தவொரு ஜனாதிபதியுடனும் பணியாற்ற தயார்
மூன்று நாடுகளும் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு ஜனாதிபதியுடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன, ஆனால் சிலருக்கு அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் உள்ளன என்பது இரகசியமல்ல.
இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் பிரசன்னத்தை கண்காணிக்க இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு புலனாய்வு முகவர்கள் பல ஆண்டுகளாக கொழும்பில் தங்கியுள்ளனர்.
கொழும்பில் இருந்து செயற்படும் வெளிநாட்டு புலனாய்வு முகவர் நிலையங்கள் இருப்பதை இலங்கை அறிந்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளத என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.