நாட்டின் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த இரண்டு பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
21 வயதுடைய இளைஞனும், போதைப்பொருளுக்கு அடிமையான அவனது சிறிய தந்தையுமே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் உள்ள பொருட்களை இந்த கும்பல் தொடர்ச்சியாக திருடிச்செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இது தொடர்பில், மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் கம்பஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பேரில் பல பொலிஸ் குழுக்களால் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கடந்த 6 நாட்களாக குறித்த இரு கொள்ளையர்களின் பயணம் தொடர்பிலான தேடலில் ஈடுபட்டிருந்த மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று (16) அதிகாலை இருவரையும் கைது செய்துள்ளனர்.
மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச்செல்லும் போதே , அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவர்கள் அவிசாவளை மற்றும் எஹலியகொட ஆகிய இடங்களிலும் இதே முறையில் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.