மன்னார் (Mannar) மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 4,285 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை அறிவித்துள்ளது.
அதன்படி நாளைய தினம் (26) மன்னார் மாவட்டத்தில் 9,228 ஏக்கர் நிலத்தில் பயிர் சேதம் ஏற்பட்ட 4,285 விவசாயிகளின் கணக்குகளில் 126 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்படவுள்ளது.
அத்தோடு, கடந்த ஆண்டு பெரும்போகத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு பயிர் சேத இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
இழப்பீட்டுத் தொகை
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பரிந்துரைக்கப்பட்ட 37,887 ஏக்கர் நிலங்களின் 33,735 விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அவர்களின் கணக்குகளில் ரூ.602 மில்லியன் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது.
அதிக பயிர் சேதம் ஏற்பட்ட மாவட்டங்களில் இழப்பீட்டுத் தொகைகள் வழங்குவது தற்போது நிறைவடைந்துள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.