ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட கல்வித் துறையில் உள்ள சேவைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe)தெரிவித்துள்ளார்.
அதன்படி, கல்வித் துறையில் உள்ள 05 சேவைகளை அதிக சம்பளம் பெறும்10 பதவிகளில் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள முரண்பாடு
அத்தோடு ,கல்வித் துறையில் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் , “அடுத்த மாதம் வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.
அது தொடர்பில் சந்தேகமே வேண்டாம். ஆசிரியர் சம்பள முரண்பாடு குறித்து பலர் கேட்கிறார்கள். அதற்கு தேவையான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை தற்போது நடத்தி வருகிறோம். இந்த சம்பள ஏற்றத்தாழ்வு தீர்க்கப்பட வேண்டும்.” என்றார்.