புதிய இணைப்பு
177 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹெண்ட்ரிக்ஸ் 4 ஓட்டங்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் மார்க்ரமும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க கிளாசன் அதிரடியாக விளையாடி 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச கடைசி ஓவரில் தென்னாபிரிக்கா அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை ஹர்தி பாண்ட்யா வீச டேவிட் மில்லர், அந்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்த 5 பந்துகளில் தென்னாபிரிக்கா அணியால் 8 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2வது முறையாக ரி20
உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
முதலில் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் – விராட் கோலி களமிறங்கினர்.
இதில் முதல் ஓவரிலேயே 14 ஓட்டங்கள் அடித்து அதிரடியாக தொடங்கிய இந்தியா, அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் விராட் கோலி மற்றும் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அணியின் புள்ளியை உயர்த்தினர்.
அக்சர் பட்டேல் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார்.
ஷிவம் துபே தனது பங்குக்கு 27 ஓட்டங்கள் அடித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் அடித்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ஓட்டங்கள் குவித்தார்.
தென் ஆபிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நோர்ஜே மற்றும் கேஷவ் மகராஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 177 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆபிரிக்கா களமிறங்க உள்ளது.
முதல் இணைப்பு
ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (29) இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் துரதிர்ஷ்டவசமான அணியாகக் கருதப்பட்ட தென்னாபிரிக்க அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்து, அரையிறுதியில் புரட்சிகரமான ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியா அணியின் வெற்றி
அதனை தொடர்ந்து அரையிறுதியில் கடந்த முறை சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதேவேளை, 2014ஆம் ஆண்டு எய்டன் மார்க்ரம் தலைமையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற தென்னாபிரிக்கா, அவரது தலைமையில் முதல் முறையாக ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கில் இன்று களம் இறங்கியுள்ளது.