ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பெஹல்காமில் செவ்வாய் அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
எதிர்பாராத இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து அவசர அவசரமாக நாடு திரும்பி பிரதமர் மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவுடன் கூட்டம் நடத்தினார்.
இதன்போது, இந்தியா (India) – பாகிஸ்தான் இடையில் 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் (Indus Waters Treaty (IWT) ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு நேற்று (23) அறிவித்தது. அதனை தொடர்ந்து இன்று (24) பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
எல்லை தாண்டிய பயங்கரவாதம்
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எதிர்ப்பு
இந்நிலையில், சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் நதி நீரை நிறுத்தியது போர் நடவடிக்கை ஆகும் எனவும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்புக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்துத் துறைகளிலும் உறுதியான எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மேலும் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்த நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தத்தின் விதிமுறை
இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி எந்தவொரு நாடும் தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது.
இரு நாடுகளும் ஒன்று கூடி கலந்து ஆலோசித்தே இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்யலாம் அல்லது ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கலாம் என பாகிஸ்தான் சிந்து நீர் ஆணையராக இருந்த ஜமாத் அலி ஷா தெரிவித்துள்ளார்