போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியிடம் இருந்து பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
கொலைக்கு பின்னர் அவரை இந்தியாவிற்கு அனுப்பிவைக்க திட்டமிட்ட கும்பல்களை தேடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் அவரை இந்தியாவிற்கு கடத்துவற்கு உதவியதாகக் கூறப்படும் வடக்கைச் சேர்ந்த ஒரு மனித கடத்தல்காரர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குருநகர் படகுத்துறை
குறித்த சந்தேகநபர் முன்னர் பல்வேறு குற்றவாளிகள் மற்றும் பிறரை சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மனித கடத்தல்காரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் கெஹல்பத்தர பத்மேவால் வழங்கப்பட்டது என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, மே 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் படகுத்துறையில் இருந்து இஷாரா ஒரு சிறிய படகில், மேலும் மூன்று பேரின் பாதுகாப்பில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.
இஷாராவை இந்தியாவில் இறக்கிவிடப்பட்ட பிறகு, மூவரும் அதே படகில் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மூவரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் இஷாராவை அனுப்பும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய முக்கிய மனித கடத்தல்காரர் கைது செய்யப்பட்ட பின்னரே அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு மூன்று பேருடன் ஒரு சிறிய படகில் கடல் கடந்து சென்றது மிகவும் பயங்கரமான அனுபவம் என்று இஷாரா கூறியதாக கூறப்படுகிறது.
பயத்தில் அழுத இஷாரா
படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிவிடுமோ என்ற பயத்தில் தான் அழுததாகவும் அவர் காவல்துறையிடம் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் இஷாராவை கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் சென்று, இந்தியாவிற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு அவர் மறைந்திருந்த இரண்டு வீடுகளையும் சோதனை செய்துள்ளனர்.
இஷாரா தங்க வைக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் கொழும்பிலிருந்து சென்ற காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நேரத்தில் மற்ற வீடு மூடப்பட்டிருந்ததாகவும், அங்கு யாரும் இல்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அந்த வீட்டில் வசிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இஷாரா நேற்று குருநகர் படகுத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
காவல்துறை சிறப்புப் படையினரால் அவர் வடக்குப் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இஷாரா நேற்று இரவு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார்.