லங்கா பிரீமியர் லீக் (LPL) உரிமையாளர் கூட்டணிகளான கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo Strikers ) மற்றும் ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) ஆகியவற்றின் ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை
இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “லங்கா பிரீமியர் லீக்கின் உரிமையாளராகவும், The IPG குழுமத்துடன் இணைந்து, இரு உரிமையாளர் அணிகளும் தங்களது ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதால் அவற்றின் ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, IPG குழுமம் SLC-யிடம் முறையாக அறிவித்து, லீக்கில் பங்கேற்கத் தொடங்கியபோது உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை புரிந்து கொள்ளத் தவறியதால், அந்தந்த உரிமையாளர் அணிகளின் ஒப்பந்தங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து, லங்கா பிரீமியர் லீக்கின் அடுத்த தொடரில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் புதிய உரிமையாளர்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.