தற்போது இங்கிலாந்து(england) டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வலுவான துடுப்பாட்டவீரராக கருதக்கூடிய ஜோ ரூட்டை(joe root) மீண்டும் அந்நாட்டு ஒருநாள் அணிக்கு அழைக்க இங்கிலாந்து கிரிக்கெட் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவும், அதன் பிறகு தொடங்கவுள்ள ‘சாம்பியன்ஸ் டிராபி’ தொடருக்காகவும் இங்கிலாந்து அணி இந்த அழைப்பை விடுத்துள்ளது.
2023 க்கு பின்னர் கழட்டிவிடப்பட்ட ஜோ ரூட்
நவம்பர் 2023 இல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஜோ ரூட் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை.
இருப்பினும், அவர் ஒருநாள் போட்டிகளிலும் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார், அவர் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 160 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 6,522 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.அவரது சாதனைகளில் 16 சதங்களும் 39 அரைசதங்களும் அடங்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போதைய முதல் நிலை துடுப்பாட்ட வீரராக இருக்கும் ஜோ ரூட், 12,972 டெஸ்ட் ஓட்டங்களுடன் 13,000 ஓட்டங்களை நெருங்கியுள்ளார்.36 சதங்கள் மற்றும் 65 அரைசதங்கள் அடித்த அவருக்கு 33 வயதாகிறது.
‘சாம்பியன்ஸ் டிராபி’க்காக பாகிஸ்தானுக்கு செல்லும் முன் இங்கிலாந்து ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அங்கு இந்தியாவுடன் 5 ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.