இந்தியாவில் (India) உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா ஆரம்பமாகியுள்ளது.
மகா கும்பமேளா (Maha Kumbh Mela ) உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று (13) தொடங்கியுள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.
12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும்.
உலகின் மிகப்பெரிய மத திருவிழா
பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும் இவ்விழாவில், இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (13) பௌர்ணமி என்பதால் கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சாதுக்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இந்த பங்கேற்கும் வகையில் அங்கு முகாமிட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாளை (14), மகர சங்கராந்தி என்பதால் இந்த நிகழ்வின் முதல் அமிர்த கால நீராடல் நடைபெறவுள்ளது. திரிவேணி சங்கமத்தில் நீராடுவது பாக்கியம் என்றும், பகவான் ராமர் கூட இங்கு வந்து நீராடி உள்ளதாக ஐதீகம் சொல்கிறது.
நாடு முழுவதும் இருந்து மகா கும்பமேளாவில் மக்கள் கலந்து கொள்ள வசதியாக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்குவதற்கு ஓட்டல்கள், விடுதிகளை தவிர மொத்தம் 1.5 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக 45000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் புரளிகள் பரவாமல் தடுக்க சிறப்பு குழுவினர் முழுமையாக கண்காணித்து வருகின்றனர். டிரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.