மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) இழப்பு எங்களுடைய ஈழ தேசிய மக்களுக்கு பாரிய, ஈடு செய்ய முடியாத இட்டு நிரப்ப முடியாத இழப்பாகவே நாங்கள் கருதுகின்றோம் என தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
கடந்த 29ஆம் திகதி உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஈழ தேசிய விடுதலை வரலாற்றில் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடிய 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மக்களோடு தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மிகப்பெரிய அரசியல் ஆளுமை மாவை சேனாதிராஜா.
மூத்த போராளியாக இந்த மண்ணிலே அவதரித்து 83 ஆண்டுகள் இந்த மண்ணிலே வாழ்ந்து எங்களோடு எங்களுக்காக எங்களில் ஒருவனாக எங்கள் தலைவனாக திகழ்ந்த பெருந்தலைவர் முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் மாவை சேனாதிராஜாவின் இழப்பு எங்களுடைய ஈழ தேசிய மக்களுக்கு பாரிய, ஈடு செய்ய முடியாத இட்டு நிரப்ப முடியாத இழப்பாகவே நாங்கள் கருதுகின்றோம்.
தன்னுடைய இளமைக்காலத்தில் 16 வயதில் இருந்து மக்களையும் மண்ணையும் நேசித்து வாழ்ந்தார். அதற்காக பலமுறை சிறை சென்றிருக்கின்றார்.
அவர் இறந்து விட்டார் என்று ஆனையிறவிலே தள்ளப்பட்ட நிலையிலும் உயிரோடு மீண்டு வந்த நாட்கள், ஊர்காவற்துறையிலே வைத்து ஈபிடிபியின் (EPDP) படுகொலை முயற்சில் இருந்து தப்பித்த நாட்கள் அந்த காலங்களை எல்லாம் கடந்து தன்னுடைய உயிரை இந்த மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடையாளமும் குறியீடாகவும் இருந்த மாவை சேனாதிராஜா விட்டுச் சென்ற பாதையில் அடுத்த சந்ததி இந்த தேசிய விடுதலைக்காக தன்னுடைய பயணத்தை இன்னும் வேகமாக கொண்டு செல்வதற்கு அவருடைய அனுபவங்கள் வழி சமைக்கும்.” என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/aoovHs7nzsU