மூதூர் இருதய புரத்தில் மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 நபர்களை மூதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஷ் (K.Sugash)கடும் கண்டனம் வெளியிட்டுள்ளாார்.
குறித்த நபர்கள் இன்று (26)மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், 15 நபர்களையும் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிடக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எதிரான அராஜகம்
அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அனுமதி இன்றி ஒன்று கூடியமை, காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, காவல்துறையினரை தாக்கியமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மூதூரில் தமிழ் மக்களுக்கெதிராக அரங்கேறும் அராஜகங்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்
அத்துடன், தொடர்ச்சியாக மூதூர் காவல்துறையினர், இரவு வேளைகளில் திட்டமிட்டு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இரவு வேளை என்பதால் ஆதாரமின்றி முறைகேடுகளில் ஈடுபடுவதும் அச்சுறுத்துவதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட மனித உரிமை மீறல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மதுபானசாலை உடன் மூடப்பட வேண்டும் எனவும் சுகாஷ் வலியுறுத்தியுள்ளார்.