வீடொன்றில் தந்தை மற்றும் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படுகொலை
செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
அநுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 12 ஆம் திகதி
இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே மேற்படி இருவரும் இராஜாங்கனைப் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தையும், 26 வயதுடைய மகனுமே
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்
27 மற்றும் 23 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தந்தையும் மகனும் பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேகநபர்களின்
தந்தையைத் தாக்கி கொலை செய்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜாங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.