திருகோணமலை மாவட்டத்தின் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள
முத்து நகர் கிராம மக்களை, அங்கிருந்து வெளியேற்ற மேற்கொண்டு வரும்
நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமானது இன்று(29) திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முத்துநகர் ஒன்றிணைந்த அனைத்து விவசாய சம்மேளனங்கள்
இணைந்து மேற்கொண்டிருந்தன.
கண்டன போராட்டம்
முத்து நகரில் 800 ஏக்கர் விவசாய காணிகள் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்து,
இந்திய கம்பெனிகளின் காணி திருட்டுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்,
குளங்களை அளிப்பது ஒரு அபிவிருத்தியா, பூர்வீக குடிகளை வெளியேற்றாதே, குளம்
இல்லாமல் நாங்கள் மண்ணையா சாப்பிடுவது, போன்ற சுலோகங்களை வேண்டியவாறு மக்கள்
இந்த கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பகுதியில், மூன்று கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள்,
கடந்த 53 ஆண்டுகளாக 800 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலங்களில் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்ற
பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.

ஆனால், துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாடுகள்
மற்றும் வழக்குத் தாக்கலுக்குப்பின், 2025 பெப்ரவரி மாதத்தில் விவசாயிகளை
அப்பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு
தெரிவித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலங்களில் 200 ஏக்கர், இரண்டு தனியார் சூரிய மின் நிறுவனங்களுக்கு
ஒப்படைக்கப்பட்டு, ஒன்று தற்போது இயங்குகிறது. 100 ஏக்கர் போதுமானது
என்றாலும், 200 ஏக்கர் பலவந்தமாக அபகரிக்கப்படும் நிலை காணப்படுகிறது.
கடந்த வருடத்தில் (2024) வாரி சௌபாக்கியா திட்டத்தின் கீழ் அரசாங்கம் குளங்களை
திருத்த நிதி ஒதுக்கீடு செய்தது. தகரவெட்டுவான் குளம் 80 வீதம் திருத்தப்பட்ட
நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையால் நிறுத்தப்பட்டது. இதேபோல் அம்மன்
குளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு திருத்தம் செய்ய அனுமதியை மறுத்து தடுத்து
நிறுத்தியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்கப்படாததுடன், நட்டஈடும் வழங்கப்படவில்லை.
பாடசாலை, கோவில்கள், வாவிகளுடன் கூடிய விவசாய நிலத்தை இவ்வாறு அபகரிப்பதை
எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தெரிவிக்கின்றனர்.
உர மானியங்கள்
முத்துநகர் பகுதியில் அமைந்துள்ள நான்கு வாவிகளில் மூன்றே தற்போதும்
எஞ்சியுள்ளன. விவசாயிகளின் நீர்ப்பாசன வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு
உட்பட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த 1000 குடும்பங்கள் 800 ஏக்கர் காணியில் 53
வருடங்கள் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை
பயிரிட்டு வருகின்றனர்.

பயிர்செய்கைக்காக தனியான வாவிகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த
பிரதேசத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கடந்த வருடங்களில் பல்வேறு
அரசாங்கங்களினால் உர மானியங்கள் கூட வழங்கப்பட்டிருந்தன.
2023 இல் துறைமுக அதிகார சபை பயிர் செய்கை நடவடிகைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி,
கட்டுப்பாடுகள் விதித்து 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய 2025 பெப்ரவரி
மாதத்திலிருந்து விவசாயிகள் அங்கிருந்து வெளியேற்றப்படும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது விவசாய நிலங்களுக்கு காணி உறுதிப் பத்திரம்
கோரியிருந்த போதிலும், பிரதேச செயலாளர் அதற்கு அனுமதியளிக்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் மக்கள் போராட்ட கூட்டமைப்பின் தலைவர் வசந்த முதலிகே, முத்துநகர் விவசாய
சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், பலரும் கலந்து கொண்டனர்.


